கோலாலம்பூர், நவம்பர்.03-
அர்ஜெண்டினா, ஸ்பெயின் போன்ற நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசிய தேசிய கால்பந்து அணியைச் சேர்ந்த 7 கலப்பு கால்பந்தாட்ட வீரர்களின் தாத்தா, பாட்டி மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது போல் போலியான ஆவணங்களை வழங்கி, உலக கால்பந்தாட்ட சம்மேளமான ஃபிஃபாவை நம்ப வைக்க முயற்சி செய்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பில் சுயேட்சை விசாரணைக் குழு தனது விசாரணையை இன்று தொடங்கியுள்ளது.
முன்னாள் தலைமை நீதிபதி துன் முகமட் டாவுஸ் ஷாரிஃப் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று திங்கட்கிழமை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியுள்ளது.
முதல் கூட்டத்தை நடத்தியுள்ள தமது தலைமையிலான குழு, இன்னும் ஆறு வாரங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று துன் முகமட் ராவுஸ் குறிப்பிட்டார்.
விசாரணை சுதந்திரமாகவும் முழு அர்ப்பணிப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறும் என்று அவர் உறுதி கூறினார்.
இவ்விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு மலேசிய கால்பந்து சங்கமான ஃஎப்எஎம் FAM, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தன்னை நியமித்ததாக துன் முகமட் ராவுஸ் கூறினார்.








