ஈப்போ, ஆகஸ்ட்.04-
பேரா மாநில அரசாங்கத்தின் பேராதரவுடன் பேரா மாநில இந்தியர் காற்பந்து சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது. இரண்டாவது இடத்தை தைப்பிங் சின் வா தமிழ்ப்பள்ளி பிடித்தது.

மூன்றாவதாக பத்தாக் ரப்பிட் தமிழ்ப்பள்ளியும், நான்காவதாக வால் புரோக் தமிழ்ப்பள்ளியும் தேர்வாகின.
பெண்கள் பிரிவில் ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி வெற்றிப் பெற்றதுடன் இரண்டாவது இடத்தை ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.
வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கத் தொகையும், சுழல் கிண்ணமும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
கடந்த 17 ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் இக்கால்பந்துப் போட்டி, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈப்போவில் உள்ள ஈப்போ பாடாங் மைதானத்தில் நடைபெற்றது.

சிவநேசன் சுழல் கிண்ணப் போட்டியான இதில் 61 குழுக்கள் கலந்து கொண்டதாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் , பேரா மாநில இந்தியர் கால்பந்து சங்கத் தலைவருமான டத்தோ அமாலுடின் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இப்போட்டியில் பேரா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளிருந்து ஆண்கள் பிரிவில் 38 குழுக்களும், பெண்கள் பிரிவில் 23 குழுக்களும் கலந்து கொண்டன. மொத்தம் 915 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
இப்போட்டியில் சிறந்த விளையாட்டாளர்கள் 25 பேர் அடையாளம் கண்டு தேசிய நிலையில் விளையாடுவதற்கு உரிய பயிற்சிகள் இப்போது முதல் கொண்டு வழங்கப்படும் என்று டத்தோ அமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

இக்கால்பந்துப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறுகையில், பள்ளி புறப்பாட நடவடிக்கையின் ஒரு பகுதியாக விளங்கும் இக்கால்பந்துப் போட்டியில் மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள், எதிர்காலத்தில் கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்குவதற்கு இது போன்ற போட்டிகள் நல்லதொரு களமாகும் என்று வெற்றி பெற்றக் குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கிய சட்டத்துறை துணை அமைச்சரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். குலசேகரன் தெரிவித்தார்.
இந்தக் கால்பந்தாட்டப் போட்டி வெகு சிறப்பாக நடைபெறுவதற்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் டத்தோ அமாலுடின் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.