கோலாலம்பூர், டிசம்பர்.12-
தாய்லாந்து – கம்போடியா எல்லையில் நிலவி வரும் போர் பதற்ற நிலையைக் கண்டு, சீ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்றிருக்கும் தேசிய வீரர்கள், தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையடையத் தேவையில்லை என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான மோதலானது எல்லையில் மட்டுமே நடப்பதாகக் குறிப்பிட்டுள்ள முகமட் ஹசான், சீ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் பாங்கோக் மற்றும் சோன்புரி ஆகிய பகுதிகள் பாதுகாப்பாகவே உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான சீ விளையாட்டுப் போட்டிகளானது வரும் 20-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
அதே வேளையில், எதிர்வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையில், அங்கு, ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளில், மலேசியா சார்பில் 1142 தேசிய வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில், அவர்களுடன் 515 அதிகாரிகளும் உடன் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








