கோலாலம்பூர், நவம்பர்.26-
மலேசிய தேசிய கால்பந்து அணியைச் சேர்ந்த 7 வெளிநாட்டு பாரம்பரிய ஆட்டக்காரர்களின் இரட்டை குடியுரிமைக் கடப்பிதழ்கள் குறித்து உள்துறை அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என்று புக்கிட் குளுகோர் எம்.பி ராம் கார்ப்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைத்துலக கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா அம்பலப்படுத்தியிருக்கும் விவகாரத்தைத் தொடர்ந்து, ஏழு பாரம்பரிய ஆட்டக்காரர்களுக்குக் கடப்பிதழ் வழங்கியதில் நடந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து புதிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு ராம் கர்பால் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இவ்விவகாரத்தில் அரச மலேசியப் போலீஸ் படையும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மும் எந்த குற்றவியல் கூறுகளும் இல்லை என்று இதற்கு முன்பு அறிவித்துள்ளன.
ஆனால் ஃபிஃபா அம்பலப்படுத்திய விவகாரங்கள், அவற்றில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பது போல உள்ளன. எனவே இவ்விவகாரம் மறு விசாரணை செய்யப்பட வேண்டிய கடும் பிரச்சினையாக உள்ளது என்று ராம் கர்ப்பால் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.








