பேரா மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் பயிலும் பாலர் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் 2027ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத் தலைவர் முனியாண்டி சண்முகம் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அறவாரியம், சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவிலான கல்வித் தோட்டத்தின் வருமானத்தைக் கொண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என்று ஈப்போவில் நடைபெற்ற நிகழ்வில் முனியாண்டி குறிப்பிட்டார்.
கல்வித் தோட்டத்தை மேம்படுத்துவதற்காக தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் 19.6 மில்லியன் ரிங்கிட் வட்டியில்லா நிதியை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அச்சங்கத்தின் தலைவர் டான் ஶ்ரீ கே. ஆர். சோமசுந்தரம் மற்றும் நிர்வாகச் செயலாளர் டத்தோ பி. சகாதேவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2025ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்குப் பதிலாக, அனைத்துத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம், மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்களை வழங்கும் போது,பள்ளிகளில் ஆசிரியர்கள், கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை எவ்வித தங்கு தடையின்றி நடத்துவதற்கு பேருதவியாக இருக்கிறது என்று பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள் தலைமையாசிரியர் கழகத் தலைவர் ஜெயக்குமார் சபாபதி தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அறவாரியத்தின் முக்கிய நோக்கம் என்றும், எதிர்காலத்தில் கல்வி உதவிகளை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.








