பேராக், கோப்பெங் கோத்தாபாரு தோட்டப்புற தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், அனைத்துலக ரோபோட்டிக்ஸ் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

கோப்பெங் சமூக மண்டபத்தில் கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கார் ஹிங் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் சாதனைப் படைத்த பத்து மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
எம்எஸ்யு சைபர்ஜெயா ஏற்பாட்டில் கடந்த அக்டோபர் மாதம் 18 நாடுகள் பங்கேற்ற இந்த மூன்று நாள் அனைத்துலகப் போட்டியில், பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் ஐந்து குழுக்களாகப் பங்கேற்று இந்தச் சாதனையைப் படைத்ததாக ஆசிரியர் ரூபன் ஆறுமுகம் தெரிவித்தார்.
மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அனைத்துலகப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்ட தொடர் பயிற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் ஆசிரியர் ரூபன் குறிப்பிட்டார்.

தங்கள் வெற்றிக்கு கடும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தந்த பெற்றோருக்கும் கோத்தா பாரு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் எஸ். ஹாரிஷ் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
உலக ரீதியான போட்டியில் பங்கேற்ற கோத்தாபாரு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட கோப்பெங் நகராண்மைக்கழக உறுப்பினர் சண்முகம் சுப்பிரமணிம், இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கார் ஹிங் மிகுந்த ஆதரவாக இருந்ததாக குறிப்பிட்டார்.

கோப்பெங் வட்டார மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, தீபாவளி பொது உபசரிப்பாக இருந்த போதிலும், இந்த நிகழ்வை சிறக்க வைக்க மேலும் ஒரு கொண்டாட்ட நிகழ்வாக சாதனைப் படைத்த கோத்தா பாரு தமிழ்ப்பள்ளி மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வாகவும் அமைந்தது குறித்து கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கார் ஹிங் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளி பொது உபசரிப்பில் திரளாக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திய மக்களுக்கு டான் கார் ஹிங் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.








