தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு 14 லட்சத்து 20 ஆயிரத்து 423 ரிங்கிட் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்று பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் தெரிவித்தார்.

தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ங்கா கோர் மிங்கும், பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தாமும் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சியின் கீழ் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி வரலாற்றிலேயே ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும், ஒரு லட்சம் ரிங்கிட் , 2 லட்சம் ரிங்கிட் என்ற அளவில் மானியம் பெற்றிருப்பதாக வூ கா லியோங் குறிப்பிட்டார்.

இதேபோன்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தலா ஆயிரம் ரிங்கிட்டும், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தலா 1,200 ரிங்கிட்டும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்பட்டுள்ளது.

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள 11 தமிழ்ப்பள்ளிகளில் கிட்டத்தட்ட 6 பள்ளிகள் பகுதி அரசாங்க உதவிப்பெற்ற பள்ளிகளாகும். சிதம்பரம்பிள்ளை போன்ற பள்ளிகளுக்கு போதுமான நிதி கிடைப்பதை உறுதி செய்ய ங்கா கோர் மிங்கும், தாமும் தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருவதாக வூ கா லியோங் குறிப்பிட்டார்.
இதேபோன்று தெலுக் இந்தானில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் போன்றவற்றுக்கு தொடர்ந்து ஒரு லட்சம், 2 லட்சம் என பெரிய அளவில் நிதி வழங்கப்படுகிறது. ங்கா கோர் மிங், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் பட்சத்தில் இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுகிறது என்று வூ கா லியோங் குறிப்பிட்டார்.

தீபகற்ப மலேசியாவில் இந்திய சமுதாயத்திற்காக ஆண்டுக்கு 60 லட்சம் ரிங்கிட்டும், தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதலாக பத்து லட்சம் ரிங்கிட்டும் ஒதுக்கீடு செய்யும் ஒரே மாநில அரசு, அது பேரா மாநிலமாகத்தான் இருக்க முடியும் என்று வூ கா லியோங் தெரிவித்தார்.

அடுத்த மாநில பட்ஜெட்டில் கூடுதல் ஒதுக்கீடு கோரப்படும் என்று குறிப்பிட்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வூ கா லியோங், தொகுதி மக்கள் தொடர்ந்து ங்கா கோர் மிங்கிற்கும், தமக்கும் வழங்கி வருகின்ற ஆதரவின் காரணமாக தங்களால் இத்தகைய கூடுதல் ஒதுக்கீட்டை வழங்க முடிகிறது என்றார்.








