கெடா, புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி நலனுக்காக, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த மாபெரும் நிதி திரட்டும் நிகழ்ச்சி சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது.
கூலிம், பாயா பெசாரியில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் பள்ளி வாரியக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சின்னையா நாயுடுவும் அவரது துணைவியாரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் வாயிலாக திரட்டப்படும் நிதி, புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய நன்கொடையாளர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவி சாந்தி காளிதேவன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளையும் தரமான மற்றும் சிறந்த பள்ளிகளாக உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய முன்னாள் மாணவர் சங்க நிறுவனர் திரு. போ. சுரேஷ் ராவ், மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் சங்கங்கள் வலுவாகவும் சிறப்பாகவும் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வு, தமிழ்ப்பள்ளிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு சமூகத்தின் பங்களிப்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.









