சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய திறந்தவெளி மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு அடுத்ததாக இருமாடி கேன்டீன் கட்டும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

சுமார் 700 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பள்ளியில், மாணவர்களின் பல்வேறு இணைப்பாட நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புதிய திறந்தவெளி மண்டபம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

அதேவேளையில், மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, பெரிய அளவிலான கேன்டீன் தேவைப்படுவதால், இருமாடி கேன்டீன் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவு சுமார் 1.2 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

இது குறித்து நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள் குமார் கூறுகையில், 2 லட்சம் ரிங்கிட் நிதியுதவி வழங்கிய லீ அறவாரியத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த நிதியுதவி பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு நிச்சயமாக வலுவான அடித்தளமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த நிதிக்கான காசோலை இன்று பள்ளி வாரியக் குழுத் தலைவர் காளிதாசன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட காளிதாசன், ஜே.அருள் குமாருக்கும், ஜசெக பொதுச்செயலாளர் அந்தோணி லோக்கிற்கும் நன்றி தெரிவித்ததோடு, விரைவில் இருமாடி கேண்டீன் கட்டப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த 2 லட்சம் ரிங்கிட் நிதியுதவியானது, லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் இருமாடி கேன்டீன் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதில் மிகப்பெரிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.








