நைஜர் ராணுவ புரட்சிக்கு ஆதரவாக அந்நாட்டிற்குள் ரஷ்யாவின் வாக்னர் படை சென்று உள்ளது. புடின் உத்தரவின் பெயரில் அங்கு சென்று நைஜர் நாட்டு ராணுவத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கி வருகிறது வாக்னர் படை.
ஆப்ரிக்காவில் நைஜர் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ புரட்சி ஏற்பட்டு உள்ளது. அங்கே பிரான்ஸ், அமெரிக்காவிற்கு கைப்பாவையாக இருந்த அரசுகள் நீக்கப்பட்டு ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ராணுவ அரசுகள் ரஷ்யாவிற்கு நேரடி ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.
உலகிலேயே அதிக தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. இங்கே இருக்கும் ஊழல், அரசியல் காரணமாக பல்வேறு வளங்கள் இருந்தும் ஆப்ரிக்க நாடுகள் எல்லாம் வறுமையின் பிடியில் உள்ளன. அதோடு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆப்ரிக்காவின் வளங்களை கொள்ளையடிப்பதற்காக அங்கே பிராக்சி வார்களை நடத்தி வருகின்றன.
ஆப்ரிக்காவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்ப்பதாக கூறி அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இங்கே உள்ள வளங்களை கொள்ளையடித்து வருகின்றன. இதற்கு எதிராக இங்கே அடிக்கடி ராணுவ புரட்சிகள் வெடிப்பது வழக்கம்.
உதாரணமாக ஆப்ரிக்காவில் உள்ள புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளில் பிரான்ஸ், அமெரிக்கா ராணுவ தளவாடங்களை அமைத்து அங்கிருந்து தங்கம் மற்றும் யுரேனியத்தை கொள்ளையடித்து வந்தது. அங்கே இருந்த அதிபர்களும் இதற்கு துணையாக இருந்தனர்.
இதையடுத்து அங்கே ராணுவ புரட்சி ஏற்பட்டு இரண்டு நாடுகளிலும் ஆட்சி கவிழ்ந்தது. அங்கே ராணுவம் வந்த பின் பிரான்ஸ், அமெரிக்கா புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறியது. இங்கே ராணுவ புரட்சிகள் நடக்க ரஷ்யா மறைமுக காரணம் என்று கூறப்படுகிறது.