சிங்கப்பூர், ஜனவரி.24-
மளிகைப் பொருட்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வேளையில் எனப்படும் மின்சிகரெட்டுகளை மறைத்து சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 21 வயது மலேசியர் ஒருவருக்கு, நேற்று 14 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி, மலேசிய வாகனங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகளிடம், அமிருல் இக்பால் நஸ்ரி என்ற அந்த ஆடவர் பிடிபட்டார்.
அவரிடமிருந்த 1000 மின்சிகரெட்டுகளானது, காரின் முன் இருக்கையின் பின்னாலும், பின்பகுதியில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அதே வேளையில், தடைசெய்யப்பட்ட இந்த பொருட்களை சிங்கப்பூக்குள் கடத்தி வர முயன்ற குற்றச்சாட்டை அந்த ஆடவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
இதற்கு முன்பு, கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, 1000 மின்சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கடத்தி, அதற்காக 320 டாலர்கள் ஊதியத்தை அவர் பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கடத்தல் முயற்சிக்குப் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருப்பதாகச் சந்தேகித்த அரசு தரப்பு, குற்றங்களைத் தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, 14 முதல் 16 வாரங்கள் வரையிலான சிறைத் தண்டனையைக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.








