பாலஸ்தீன முகாமை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நள்ளிரவில் நடத்திய டிரோன் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன் மீது நடத்திய மிகப்பெரிய ராணுவ தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசாமுனை மற்றும் மேற்குக்கரை என இரு பகுதிகளாக உள்ளது. இதில் காசாமுனை பகுதியானது ஹமாஸ் அமைப்பினரால் நிர்வகிக்கப்படுகிறது. மேற்குகரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார்.
மேற்குக் கரையின் சில பகுதிகள் இஸ்ரேல் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பாலஸ்தீனத்தின் பல்வேறு போராளி குழுக்கள் செயல்படுகின்றன. இவர்களை இஸ்ரேல் அரசு, பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. எனவே இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனிய போராளி குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.
இந்தநிலையில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக்கரையின் ஜெனின் நகரில் போராளி குழுக்கள் சிலர் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன்பேரில் இஸ்ரேல் ராணுவத்தினர் முகாம்கள் மீது நள்ளிரவு டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் தாக்குதல் நடைபெற்ற அந்த தெருக்களில் கரும்புகை எழுந்ததாகவும், சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.