தைப்பே, ஜனவரி.24-
தைவான் தலைநகர் தைப்பேயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடங்களில் ஒன்றான தைப்பே 101 (Taipei 101) கோபுரத்தை, எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஏறவிருந்த அமெரிக்க வீரர் அலெக்ஸ் ஹோன்னோல்டின் (Alex Honnold) சாகசப் பயணம் மோசமான வானிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று ஜனவரி 24 ஆம் தேதி மலேசிய நேரப்படி காலை 9 மணியளவில் தைப்பே 101 கட்டத்தில் Alex Honnold ஏறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
எனினும் காலையில் தைப்பேயில் பெய்த கனமழை மற்றும் மேக மூட்டமான வானிலை காரணமாக, பாதுகாப்பு கருதி இந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நெட்ஃபிக்ஸ் (Netflix) நேரலையாக ஒளிபரப்பவிருந்த இந்த 'ஸ்கைஸ்க்ரேப்பர் லைவ்' (Skyscraper LIVE) நிகழ்வு, 24 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டு, நாளை ஜனவரி 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இந்த சாகசம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
508 மீட்டர் அல்லது 1,667 அடி உயரமுள்ள இந்தக் கட்டடத்தை, Alex Honnold கயிறுகள் அல்லது பாதுகாப்பு வலைகள் எதுவுமின்றி தனது வெறும் கைகளால் மட்டுமே ஏறத் திட்டமிட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே Free Solo என்ற ஆவணப் படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற புகழ் பெற்ற மலையேற்ற வீரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.








