வாஷிங்டன், ஜனவரி.23-
1எம்டிபி நிறுவனத்தில் நடந்த மாபெரும் நிதி மோசடியில் தனது பங்களிப்பை ஒப்புக் கொண்ட Goldman Sachs Group Inc நிறுவனத்தின் முன்னாள் வங்கியாளரான Tim Leissner, மத்திய சிறையில் சரணடைவதற்கு முன்னதாக அமெரிக்க அதிபரின் மன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்க நீதித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பதிவுகளின் படி, Leissner-இன் விண்ணப்பமானது, கடந்த ஆண்டு செப்டம்பர் 3 மற்றும் நவம்பர் 18 ஆகிய தேதிகளுக்கு இடையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோல்ட்மேன் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியத் தலைவராகப் பணியாற்றிய Leissner, 1எம்டிபி நிறுவனத்திலிருந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தவறாகப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றில் பங்கேற்ற குற்றச்சாட்டை, கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டார்.
பின்னர் அவர் அமெரிக்க வழக்கறிஞர்களுடன் ஒத்துழைத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு, நியூயார்க்கின் Brooklyn நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில், கோல்ட்மேன் நிறுவனத்தில் பணியாற்றிய தனது சக ஊழியரான Roger Ng-க்கு எதிராக ஒரு முக்கிய சாட்சியாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.








