சீனாவின் முகமாக இருக்கும் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் இந்தாண்டு எங்குமே வெளியே செல்லவில்லை. தொடர்ந்து உள்நாட்டிலேயே முடங்கியுள்ளார். இதற்கான காரணம் என்ன தெரியுமா! வாங்கப் பார்க்கலாம்.
சர்வதேச அரசியலைக் கவனித்தோருக்கு ஒரு விஷயம் நன்கு தெரிந்திருக்கும். சர்வதேச அளவில் சீனாவின் முகமாகவும் அந்நாட்டின் அதிபராகவும் இருக்கும் ஜி ஜின்பிங், எப்போதும் உலகெங்கும் பல நிகழ்வுகளில் தொடர்ச்சியாகக் கலந்து கொள்வார்.
ஆனால், இந்தாண்டு அவர் எங்கேயும் வெளியே வரவில்லை. இந்தாண்டு 8 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஜி ஜின்பிங் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே சீனாவுக்கு வெளியே சென்றுள்ளார். இப்படி அவர் உள்நாட்டிலேயே முடங்க என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
இந்தாண்டு ஜி ஜின்பிங் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே சீனாவுக்கு வெளியே நாட்களைக் கழித்துள்ளார். அதுவும் அண்டை நாடான ரஷ்யாவுக்கு அவர் சென்றது தான் ஒரே பயணமாகும். கடந்த மாதத்தில் ரஷ்யா சென்ற ஜி ஜின்பிங், அங்கு புதினை நேரில் சந்தித்திருந்தார். அவர் அதிபராகப் பொறுப்பேற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், கொரோனா காலத்தைத் தவிர்த்துப் பார்க்கும் போது அவர் இவ்வளவு குறைவாக வெளிநாடுகளுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
கொரோனாவுக்கு முன்பு வரை பார்த்தோம் என்றால்.. அவர் அமெரிக்க அதிபரைக் காட்டிலும் அதிக சர்வதேச பயணங்களை மேற்கொண்ட நபராக இருந்தார். கடந்த 2013 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ஜி ஜின்பிங், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 14 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார். அதேநேரம் அமெரிக்க அதிபரான டிரம்ப் ஒவ்வொரு ஆண்டும் 12 வெளிநாட்டுப் பயணங்களை மட்டுமே மாற்றியுள்ளார்.
ஆனால், இப்போது அங்கே நேர்மாறாக ஒரு சூழலே உருவாகியிருக்கிறது. அதாவது இப்போதும் வெளிநாட்டுத் தலைவர்களை அவர் சந்திக்கிறார் என்ற போதிலும், இவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக அவர்களைச் சீனாவுக்கு வரவைக்கிறார் ஜின்பிங்.. இந்த ஆண்டு இதுவரை மட்டும் பிரான்ஸ், அமெரிக்கா உட்பட மொத்தம் 36 நாடுகளின் பிரதிநிதிகள் சீனா வந்து அவரை சந்தித்துள்ளனர்.