மலேசியா–இந்தியா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாடுகளின் வர்த்தகச் சமூகங்களை இணைக்கும் புதிய கூட்டாண்மைத் தளத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
புடிடில்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட இருதரப்புச் சந்திப்பின் போது இத்தீர்மானம் உறுதி செய்யப்பட்டது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசியக் குழுவில் முதலீட்டு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனியோடு, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணனும் பங்கேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதே இக்கூட்டாண்மையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், இந்தியாவின் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம், செமிகண்டக்டர், தொழில்முறை சேவைகள் மற்றும் நவீன உற்பத்தித் துறை வலிமையைப் பயன்படுத்தி, மலேசியாவில் உயர்மதிப்புமிக்க வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமணன் உறுதியளித்தார்.
அதேவேளையில் இக்கூட்டாண்மை மூலம் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் ஒவ்வொரு முதலீடும், உள்ளூர் தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டிற்கும், உயர்மதிப்புமிக்கப் பணிகளுக்கும் வழிவகுப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம், செமிகண்டக்டர், தொழில்முறை சேவைகள் மற்றும் நவீன உற்பத்தித் துறை போன்ற உயர்மதிப்புமிக்கத் துறைகளில் இந்தியா கொண்டுள்ள உலகத்தரம் வாய்ந்த வலிமையைப் பயன்படுத்தி, மலேசியப் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புச் சந்தைக்கும் புதிய கதவுகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.








