நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் மாயமான 17 மலேசியர்களைத் தேடி ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை பலனளிக்கவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள் பயணித்த ஆறு வாகனங்கள் குறித்த எந்தவிதத் தடயமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேடுதல் நடவடிக்கையை ஏற்பாடு செய்த ஃபிஷ்டெயில் டூர் & டிராவல்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியான ரோஷன் பாண்டே கூறுகையில், வெள்ளம் அடித்துச் சென்ற பகுதியை ஹெலிகாப்டர் நான்கு முறை சுற்றி வந்து தேடியும் குழுவினரின் உடைமைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அருகிலுள்ள வனப்பகுதியிலும், 30 கி.மீ. தொலைவிலான பகுதிகளிலும் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், மருத்துவமனைகளிலும் காயமடைந்தவர்கள் குறித்துத் தேடப்பட்ட நிலையில், மாயமான குழுவைச் சேர்ந்த எவரும் அங்கு இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரிடரில் மீட்கப்பட்ட சடலங்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
இந்த குழுவில் மொத்தம் 17 மலேசியர்கள், இரண்டு அமெரிக்கர்கள், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 33 பேர் ஆறு வாகனங்களில் பயணம் செய்ததாகவும் ரோஷன் தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்தச் சடலமும் 17 மலேசியர்களில் ஒருவருடையது என உறுதி செய்யப்படாத நிலையில், தேடுதல் நடவடிக்கையானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.








