Sep 6, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் அன்வார் கலந்துரையாடல்: புகைமூட்டம், காலநிலை நெருக்கடி குறித்து ஆலோசனை
உலகச் செய்திகள்

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் அன்வார் கலந்துரையாடல்: புகைமூட்டம், காலநிலை நெருக்கடி குறித்து ஆலோசனை

Share:

1998 ரெஃபோர்மாசி இயக்க காலகட்டத்தில் தொடங்கிய நட்பைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்காவின்முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் கலந்துரையாடியுள்ளார்.

தற்போது மலேசியாவைப் பாதித்து வரும் புகைமூட்டம், உலகளாவிய காலநிலை நெருக்கடி மற்றும் தூய்மையான எரிசக்தியை நோக்கிய நாட்டின் மாற்றம் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சிங்கப்பூரில் இருக்கும் அல் கோர், சரவாக் மாநிலம் செரியான் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றின் மாசுக் குறியீடு 500-ஐ கடந்ததைத் தொடர்ந்து மலேசியாவில் நிலவும் புகைமூட்டம் குறித்து அனுதாபம் தெரிவித்ததாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேபாளத்தில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளம் உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் பரவலான தாக்கங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

மேலும் மலேசியா புதைபடிவ எரிபொருட்களில் இருந்து விலகி தூய்மையான மற்றும் நிலையான எரிசக்தி ஆதாரங்களை நோக்கி மாற்றத்தை விரைவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், திட்டமிடக்கூடிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காலநிலை மாற்றம் மற்றும் மலேசியாவின் எரிசக்தி மாற்றம் தொடர்பான ஒத்துழைப்பைத் தொடர அல் கோரை விரைவில் மலேசியாவிற்கு வருமாறும் அன்வார் அழைப்பு விடுத்துள்ளார்.

1998-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியா பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின் போது இருவருக்கும் இடையிலான தொடர்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related News