Aug 27, 2026
Thisaigal NewsYouTube
வடக்கு அல்ஜீரியாவில் கடும் காட்டுத்தீ: 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!
உலகச் செய்திகள்

வடக்கு அல்ஜீரியாவில் கடும் காட்டுத்தீ: 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

Share:

வடக்கு அல்ஜீரியாவில் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் காட்டுத்தீயில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 54 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்கரை மாநிலத்தில் பல்வேறு இடங்களில், ஒரே நேரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜிஜெல் மாநிலத்தில் 5 பேரும், பெஜாயாவில் 4 பேரும், டிஸி ஓசூவில் 3 பேரும் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சர் சயீத் சயூத் தெரிவித்துள்ளார்.

பெஜாயா மற்றும் ஜிஜெல் பகுதிகளில் இருந்து பல வீடுகள் பாதுகாப்பான இடங்களுக்கு காலி செய்யப்பட்டுள்ளன. தடிமனான புகை சூழ்ந்ததால், பொதுமக்கள் அங்குள்ள அஞ்சல் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் 69 இடங்களில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, வட ஆப்பிரிக்காவில் கடுமையான வெப்ப அலை நிலவி வருவதால் தீப்பரவல் மேலும் அதிகரித்து தீவிரமடைந்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் அல்ஜீரியாவில் சமீபத்திய ஆண்டுகளில் காட்டுத்தீயின் தீவிரமும் பாதிப்பும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News