மெக்சிகோவில் கிறிஸ்தவ திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்தனர்.
மெக்சிகோவின் டிமஸ்கல்சின்கோ நகரில் உள்ள ஒரு கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலத்தில் கடந்த சனிக்கிழமை திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் நிறைவில் வாணவேடிக்கை நடத்துவதற்காக, வழிபாட்டு தலத்திற்கு அருகே பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கு கூடியிருந்த மதபோதகர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் 10 பேர் உயிரிழந்ததுடன், 60 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பட்டாசுகள் வெடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








