இலங்கையில் மதங்களை இழிவுபடுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அந்நாட்டின் புத்தசாசன, மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் பவுத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடிகை நடாஷா எதிரிசூரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து நடாஷா எதிரிசூரிய மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் இலங்கையை விட்டு தப்பி செல்வதற்காக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நிலையில் நடாஷா எதிரிசூரியா கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
மேலும் ஜப்பான் பவுத்த விகாரை ஒன்றில் மாககல்கந்தே தேரர் என்பவர் இளைஞர் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் பவுத்த விகாரைகள் அமைப்பதாக கூறி பலநாடுகளில் பண மோசடியிலும் மாககல்கந்தே தேரர் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை புத்தசாசன, மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, எந்த ஒரு மதத்தையும் யாரும் இழிவுபடுத்த அனுமதிக்க முடியாது. மத சுதந்திரம் என்ற பெயரில் இத்தகைய செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நடாஷா எதிரிசூரியா, பவுத்த மத அமைச்சகத்தின் தலையீட்டால்தான் கைது செய்யப்பட்டார். பொதுவாக பவுத்த மதத்தை இழிவுபடுத்தும் போக்குகளை நாங்கள் தடுப்பது இல்லை என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நடாஷா விவகாரத்தில் உடனே நடவடிக்கை எடுத்தோம் என்பதை அவர்கள் மறந்தும் விடுகின்றனர்.