Jan 20, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் மாயமான விமானத்தின் சில சிதைந்த பாகங்கள் மீட்பு
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் மாயமான விமானத்தின் சில சிதைந்த பாகங்கள் மீட்பு

Share:

மக்காஸார், ஜனவரி.20-

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 11 பேருடன் மாயமான சிறிய ரக விமானத்தின் சிதைந்த பாகங்கள் சில கண்டறியப்பட்டுள்ளன. ஜாவா தீவின் யோக்யகர்த்தாவிலிருந்து (Yogyakarta) தெற்கு சுலவேசியின் தலைநகரான மக்காஸர் (Makassar) நோக்கிச் சென்ற இந்த ATR 42-500 ரக விமானம், சனிக்கிழமை மதியம் மோசமான வானிலை காரணமாக ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.

இந்தோனேசிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தால் (Indonesia Air Transport) இயக்கப்பட்ட இந்த விமானத்தில், கடல்சார் மற்றும் மீன்வளத் துறை அமைச்சைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மற்றும் 8 சிப்பந்திகள் பயணித்துள்ளனர்.

விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியின் போது, புலுசரௌங் (Bulusaraung) மலைச் சரிவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் விமானத்தின் ஜன்னல் மற்றும் இதர பாகங்கள் சிதறிக் கிடப்பது கண்டறியப்பட்டது.

மலைப்பகுதியின் வடக்குச் சரிவில் விமானத்தின் வால் பகுதி மற்றும் நடுப்பகுதி (Fuselage) சிதறிக் கிடப்பதை மீட்புக் குழுவினர் உறுதிச் செய்துள்ளனர்.

மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் மக்காஸர் தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் கூறுகையில், விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடைத்துள்ளதால் தேடுதல் வளையம் சுருங்கியுள்ளதாகவும், தற்போது மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடிய பயணிகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

செங்குத்தான மலைப்பாதை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக மீட்புப் பணிகளில் சவால்கள் நீடித்த போதிலும், இதுவரை இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீதமுள்ளவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

Related News

இந்தோனேசியாவில் மாயமான விமானத்தின் சில சிதைந்த பாகங்கள் ம... | Thisaigal News