Jan 22, 2026
Thisaigal NewsYouTube
பேருந்தில் பாலியல் தொல்லை: இளம்பெண் ஷிம்ஜிதா கைது
உலகச் செய்திகள்

பேருந்தில் பாலியல் தொல்லை: இளம்பெண் ஷிம்ஜிதா கைது

Share:

திருவனந்தபுரம், ஜனவரி.22-

கேரளாவில் தமக்கு ஆடவர் ஒருவர் பேருந்தில் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காணொளி வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தீபக். 41 வயதான அவர் அப்பகுதியில் ஒரு ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கண்ணூர் அருகே ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்த தீபக், தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி ஷிம்ஜிதா முஸ்தபா என்ற இளம்பெண் தான் எடுத்த ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ வைரலாகியது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் தீபக்கின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தீபக் இத்தகைய செயலில் ஈடுபடக்கூடியவர் அல்ல என்றும், சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகவே ஷிம்ஜிதா பொய்யான தகவலை பரப்பியதாகவும் அவரது நண்பர்கள் கூறினர். ஷிம்ஜிதாவிடம் தான் தவறாக நடக்கவில்லை என்று தீபக்கும் வருத்தத்துடன் தன்னுடைய நண்பர்களிடம் கூறியுள்ளார். ஆனால் சமூக வலைதளங்களில் அவர் மீது பலரும் குற்றம்சாட்டியதால் தீபக் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி தீபக் தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீபக்கின் தற்கொலைக்குப் பின்னர் அனைவரும் ஷிம்ஜிதாவை குற்றம்சாட்டத் தொடங்கினர். தங்களுடைய மகன் சாவுக்கு காரணமான ஷிம்ஜிதா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீபக்கின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக இவர்கள் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து ஷிம்ஜிதா மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து அறிந்ததும் ஷிம்ஜிதா தலைமறைவானார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஷிம்ஜிதா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து போலீசார் அறிக்கை வெளியிட்டனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் இவர் வடகரையில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஷிம்ஜிதாவை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் மருத்துவ பரிசோதனை நடத்தி அவரை போலீசார் குன்னம்குளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஷிம்ஜிதாவை 14 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் மஞ்சேரி சிறையில் அடைத்தனர்.

ஷிம்ஜிதா முஸ்தபா மீது பிஎன்எஸ் 108 பிரிவில் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.

Related News