Jan 24, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் வான்வழியைத் தவிர்க்கிறது கே.எல்.எம் ஏர்லைன்ஸ்
உலகச் செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் வான்வழியைத் தவிர்க்கிறது கே.எல்.எம் ஏர்லைன்ஸ்

Share:

ஆம்ஸ்டர்டாம், ஜனவரி.24-

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழல் காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை அந்த பிராந்தியத்தின் பெரும்பகுதிகளில் விமானங்களை இயக்கப் போவதில்லை என்று டச்சு நாட்டின் கே.எல்.எம் (KLM) விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இந்த திடீர் முடிவிற்கான துல்லியமான காரணத்தை கே.எல்.எம் குறிப்பிடவில்லை என்றாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்தப் பிராந்தியத்திற்கு விமானம் தாங்கிப் போர்க் கப்பல் மற்றும் பிற இராணுவத் தளவாடங்களை அனுப்ப உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.

ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறுகையில், ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலையும் "எங்களுக்கு எதிரான முழுமையான போராகவே" கருதுவோம் என்று எச்சரித்திருந்தார்.

இது குறித்து கே.எல்.எம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான், ஈராக் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்வெளியில் கே.எல்.எம் விமானங்கள் பறக்காது.

மேலும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் வான்வழிகளையும் நாங்கள் தவிர்க்க முடிவு செய்துள்ளோம்."

"இதன் விளைவாக, மறு அறிவிப்பு வரும் வரை Dubai, Riyadh, Dammam மற்றும் Tel Aviv ஆகிய நகரங்களுக்கு கே.எல்.எம் விமானங்கள் இயக்கப்படாது," என்றும் அவர் தெரிவித்தார்.

Related News