Sep 13, 2026
Thisaigal NewsYouTube
பண பலம் மற்றும் மிரட்டல்கள் மூலம் அகதிகளை ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தும் அமெரிக்கா!
உலகச் செய்திகள்

பண பலம் மற்றும் மிரட்டல்கள் மூலம் அகதிகளை ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தும் அமெரிக்கா!

Share:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் குடியேறியவர்களை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்துவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிற்குள் நுழையும் பிற நாட்டு அகதிகளைத் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப மறுக்கும் நாடுகளை மிரட்டும் வகையில், விசா தடைகளை விதிப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், எசுவாத்தினி, உருவாண்டா, எக்குவடோரியல் கினியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பல மில்லியன் டாலர்களை நிதியுதவியாக வழங்கி, இந்த அகதிகளை அங்கு கொண்டு சென்று சேர்க்கும் ரகசிய ஒப்பந்தங்களை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் பல ஆண்டுகள் சட்டப்பூர்வப் பாதுகாப்புடன் வாழ்ந்தவர்கள் மற்றும் தஞ்சம் கோரியவர்கள் எனப் பலரும் நள்ளிரவு விமானங்களின் மூலம் கைகளில் விலங்கிடப்பட்டு, எசுவாத்தினி போன்ற நாடுகளின் கடுமையான பாதுகாப்புடைய சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். கம்போடியா, கியூபா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள், தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத ஆப்பிரிக்க நாடுகளில் முறையான ஆவணங்கள் மற்றும் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மனித உரிமை அமைப்புகளும் வழக்கறிஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அதிகாரப்பூர்வ வழிகளில் நடக்கும் "நவீன மனிதக் கடத்தல்" என்றும், சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நைஜீரியா, புர்க்கினா பாசோ போன்ற நாடுகள் அமெரிக்காவின் இந்த மிரட்டல்களுக்குப் பணிய மறுத்துள்ள நிலையில், கானா போன்ற சில ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவின் நிதியுதவி மற்றும் வர்த்தகச் சலுகைகளுக்காக இந்த அகதிகளை ஏற்கச் சம்மதித்துள்ளன.

Related News