Oct 13, 2026
Thisaigal NewsYouTube

பாகிஸ்தானில் ரயிலை சிறைபிடித்த 33 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பயணிகள் அனைவரும் மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாகிஸ்தானில் ரயிலை சிறைபிடித்த 33 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பயணிகள் அனைவரும் மீட்பு

கராச்சி, மார்ச்.13-

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலைச் சிறைபிடித்த பயங்கரவாதிகள் 33 பேரும், ராணுவத்தால் கொல்லப்பட்டனர். பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி 'ஜாபர் எக்ஸ்பிரஸ்' பயணியர் ரயில் நேற்று முன்தினம் காலை சென்றது. இதில், ஒன்பது பெட்டிகளில் 450க்கும் மேற்பட்ட பயணிகளும் இருந்தனர்.

தாதர் என்ற இடத்தின் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, பலுசிஸ்தான் தனி நாடு கேட்டு போராடி வரும் பயங்கரவாதிகள், தண்டவாளத்தை வெடி வைத்துத் தகர்த்தனர். இதனால், ரயில் தடம் புரண்டது. அந்த சந்தப்பத்தை பயன்படுத்தி ரயிலில் ஏறிய பயங்கரவாதிகள், அங்கிருந்த இன்ஜின் டிரைவர் மற்றும் ராணுவ வீரர்களைச் சுட்டுக் கொன்றனர்; பெண்கள், குழந்தைகள் உட்பட பலரையும் சிறை பிடித்தனர்.

பாகிஸ்தான் சிறையில் உள்ள பலுசிஸ்தான் ஆதரவு அரசியல் கைதிகள், ஆர்வலர்கள் மற்றும் போராட்டக்காரர்களை அரசு 48 மணி நேரத்தில் விடுவிக்க எச்சரிக்கை விடுத்திருந்தனர். பாகிஸ்தான் அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை.

ரயில் கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு ராணுவத்தினர் மற்றும் பிற பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். இதில், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில், 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்தது. இந்த சம்பவத்தில், 21 பயணிகள், 4 துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →