அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சீக்கியர்களுக்கான தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் அமைப்பு காலிஸ்தான். 1984-ம் ஆண்டே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் துடைத்தெறியப்பட்டுவிட்டனர். ஆனால் காலிஸ்தான் சித்தாந்தம் இன்னமும் ஓயவில்லை. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என சீக்கியர்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில் மீண்டும் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை தீவிரவாதிகள் உயிர்ப்பித்து வருகின்றனர். இந்தியாவிலும் அண்மையில் காலிஸ்தான் கோரிக்கையை வலுப்படுத்த இந்த பயங்கரவாதிகள் முயற்சித்தது முறியடிக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித்பால் சிங் என்ற பயங்கரவாதி மூலம் காலிஸ்தான் கோரிக்கை தூண்டிவிடப்பட்டது. ஆனால் பல நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் அம்ரித்பால்சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து காலிஸ்தான் கோரிக்கையை தூண்டிவிடக் கூடிய பயங்கரவாத குழுக்களின் தலைவர்கள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அண்மையில் இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் புலிப்படை இயக்கத்தின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜார், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படுகொலைக்கு இந்தியாதான் காரணம், இந்தியாவின் ரா அமைப்புதான் இப்படுகொலையை செய்ததாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர்.