இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 120 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பகதுன்வா மாகாணம் உள்ளது. அந்த நாட்டின் 4-வது பெரிய மாகாணமாக கைபர் பக்துன்க்வாவில் பஜவுர் என்ற மாவட்டம் உள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் ஜேயூஐ.எப் (JUI-F) அரசியல் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசியல் கட்சியின் கூட்டத்தில் நூற்றுக்கணக்கனவர்கள் பங்கேற்று இருந்தனர்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்தது. இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் மரண ஓலமிட்டு அங்கும் இங்கும் சிதறி ஓடினர். குண்டு வெடித்ததில் அப்பகுதி முழுவதும் ஒரு நொடி குலுங்கியது. வெடி குண்டு தாக்குதலில் 39 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 120 பேர் படுகாயம் அடைந்தனர்.
கை கால்களை இழந்த நிலையில், பலரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் மீட்பு குழுவினர் சேர்த்தனர். காயம் அடைந்தவர்களில் 17 பேர் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
தற்கொலைப்படை தாக்குதல் மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாகவும், மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவன் வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக கைபர் பக்துன்க்வா மாகாண அமைச்சர் ரியாஸ் அன்வர் தெரிவித்தார். குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் படுகாயங்களுடன் பலரும் உதவி கேட்டு அலறும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
ஆம்புலன்ஸ்கள் சைரன் ஒலித்தபடி அப்பகுதியை நோக்கி அணி வகுத்த சென்ற காட்சிகளும் நெஞ்சை உறைய வைக்கும் விதமாக உள்ளது. பாகிஸ்தானின் தேசிய சபை இன்னும் சில வாரங்களில் கலைக்கப்பட இருக்கிறது. வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் அங்கு தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வரும் நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.