தண்ணீர், இறைச்சி, சோறு, சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு பதிலாக வெறும் பழங்களையும், பழச்சாறுகளையும் மட்டும் சாப்பிட்டு வந்த 'வீகன்' இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக 39 வயதில் உயிரிழந்துள்ளார்.
நம்மை சுற்றி இருக்கும் எந்த பொருளும் ஒரேயொரு மூலப்பொருட்களால் ஆனது கிடையாது. எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு பொருள் கலந்துதான் இருக்கும். இயற்கையிலேயே பல மூலக்கூறுகள் கலந்துதான் பொருட்கள் உருவாகின்றன. அப்படி இருக்கையில் நாம் உயிர்வாழ சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவது போதுமானதா? என்கிற கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. காலங்காலமாக பலர் வெறும் சைவம் மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல சிலர் இரண்டையும் கலந்து சாப்பிடுகிறார்கள்.
இந்நிலையில் சமைக்காத வெறும் சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வந்த பெண்மணி ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த ஜன்னா சாம்சோனோவா எனும் பெண்மணிதான் அவர். இன்ஸ்டாகிராமில் ஜன்னா டி'ஆர்ட் எனும் பெயரில் செயல்பட்டு வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக இவர் இதுவரை தண்ணீரை குடித்ததே இல்லை என்று சொல்லப்படுகிறது. உடலின் நீர் தேவையை பூர்த்தி செய்ய அவர் பழச்சாறுகளை எடுத்துக்கொண்டுள்ளார்.
அதேபோல வேகவைக்காத பச்சை காய்கறி, பழங்களையே இவர் சாப்பிட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரது நண்பர்கள் கூறியதாவது, "இவளுடைய கண்கள் அவ்வளவு பிரகாசமாக இருக்கும். முடியும் நல்ல நீளமாக இருக்கும். ஆனால் எலும்பும் தோலுமாய் இருந்த தனது உடலை பராமரிக்காமல் அவல் இருந்ததற்கான காரணமும் இதுதான். கண்களும், முடியும் மட்டுமே அழகு என்று நம்பிக்கொண்டிருந்தார்.
அவர் நோய்வாய்ப்படும்போது மருத்துவர்களை அணுக சொல்வேன். ஆனால் எங்கள் பேச்சை அவள் கேட்கவே மாட்டாள். மருத்துவர்கள் பழங்களைதான் சாப்பிட சொல்வார்கள். எனவே நான் பழங்களையே சாப்பிட்டுக்கொள்கிறேன் என அநியாயத்திற்கு டயட் மெயின்டெயின் செய்து வந்தாள். தானியங்கள், கீரைகள், அரிசி உள்ளிட்ட பொருட்களால் ஆன எதையும் அவள் சாப்பிட்டு நான் பார்த்ததே கிடையாது. கடைசியில் இப்போது அவள் இறந்துவிட்டாள்" என்று கூறியுள்ளார்.