மாஸ்கோ: ரஷ்யாவில் கலகத்தில் ஈடுபட்ட வாக்னர் குழுவினர் ராணுவத்தில் இணையலாம் அல்லது விரும்பினால் பெலாரஸ் செல்லலாம் என்று புதின் தெரிவித்துள்ளார். வாக்னர் குழு கலகத்தில் ஈடுபட்டதற்கு பிறகு முதல் முறையாக பேசிய புதின் இவ்வாறு கூறினார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் குழு என்னும் தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை நின்றது. ஆனால், திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே இந்தக் குழு திரும்பியது. ரஷ்யாவின் ராணுவ தலைமையை மாற்றுவோம் என்ற அரைகூவலோடு மாஸ்கோ நகரை நோக்கி முன்னேறியது. ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் குழு மேற்கொண்ட இந்த கிளர்ச்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
ரஷ்யாவில் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பெலராஸ் அதிபர் தலையீட்டால் வாக்னர் குழு கலகத்தை முடித்துக் கொண்டது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ முயற்சியில் நடந்த இந்த சமரச ஏற்பாட்டில், தனியார் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. அவர் பெலாரஸ் செல்ல ரஷ்யா அனுமதி அளித்தது.