சீனா இப்போது சத்தமே இல்லாமல் பூமிக்கு அடியில் சுமார் 32,000 அடி ஆழத்தில் துளை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்தாண்டு சீனா அமைக்கும் இரண்டாவது துளை இதுவாகும்.
இந்த பூமி பல மர்மங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. பூமி குறித்து நாம் தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு மிகப் பெரிய வியப்பைக் கொடுப்பதாகவே இருக்கிறது.
பூமியில் இன்னும் என்னவெல்லாம் மர்மங்கள் இருக்கிறது என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். அதன்படி சீனா நடத்தும் ஆய்வு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இரண்டாவது முறையாகச் சீனா பூமியில் மிக ஆழமான ஒரு துளையை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 10,000 மீட்டர், அதாவது 34,000 அடி ஆழத்தில் அவர்கள் இந்த துளையை ஏற்படுத்த உள்ளனர். அந்த ஆழத்தில் என்ன மாதிரியான இயற்கை எரிவாயு இருக்கிறது.. எந்தளவுக்கு அவை இருக்கிறது என்பது குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளச் சீனா இந்த ஆய்வை நடத்துகிறது.
இதற்கான பணிகளைக் கடந்த வியாழக்கிழமை சீனா தொடங்கியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தான் 10,520 மீட்டர் 34,000 அடி ஆழத்தில் இந்த துளையைப் போட உள்ளனர். இதற்கு அவர்கள் ஷெண்டி சுவாங்கே 1 (Shendi Chuanke 1) என்று பெயரிட்டுள்ளனர். அங்கு ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு குறித்த தகவல்களைச் சேகரிக்கச் சீனா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளது.
அந்த முதல் துளை இயற்கை எரிவாயு தொடர்பானது என்று கூறப்பட்டாலும் கூட, உண்மையில் சீனா பூமியின் உள் கட்டமைப்பு குறித்துத் தெரிந்து கொள்ளவே இந்த ஆய்வுகளைச் செய்வதாகச் சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், இதை யாரும் உறுதி செய்யவில்லை.