கத்தோலிக்க திருச்சபை தன்பாலின ஈர்ப்பாளர்கள் உட்பட அனைவருக்காகவும் திறந்திருக்கும் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
86 வயதாகும் போப் பிரான்சிஸ் உலகம் முழுவதும் இருக்கும் கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்களின் குருவாக திகழ்கிறார். இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. அவரது குடல் சுருங்கியதால் அதன் முனையில் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 33 செ.மீ அளவில் குடல் வெட்டி எடுக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து அவரை பரிசோதித்ததில் குடலில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மட்டுமல்லாது உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஜூன் மாதம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு பெற்று வந்த அவர் பின்னர் வாட்டிக்கன் திரும்பினார். வாட்டிக்கன் திரும்பினாலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் தற்போது உடல் நலம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். நேற்று போர்ச்சுகலில் நடந்த உலக இளைஞர் தின கத்தோலிக்க திருவிழாவில் பங்கேற்றுவிட்டு ரோம் திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியுள்ளதாவது, "எனது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. இருப்பினும் தசைகள் பிடிப்பு தரும் வரை வயிற்றில் பெல்ட் கட்டியிருக்க வேண்டியது அவசியம்.
2-3 மாதங்கள் வரை பெல்ட் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே இதை அணிந்துக்கொண்டுதான் நடமாடிக்கொண்டிருக்கிறேன். தேவாலயங்கள் குறித்து ஏராளமான கேள்விகள் எழுப்பப்படுகிறது. சர்ச்கள் அனைவருக்கும் பொதுவானவை. கத்தோலிக்க திருச்சபை தன்பாலின ஈர்ப்பாளர்கள் அனைவருக்கும் திறந்திருக்கும். ஆனால், இங்கு வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இருக்கின்றன. எனவேதான் இவர்களுக்கான திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதற்கான அர்த்தம் தன்பாலின ஈர்ப்பு என்பது பாவம் என்பதல்ல. ஒவ்வொருவரும் கடவுகளை தங்கள் சொந்த வழியில் நேசிக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.