அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே அமைதியான அணுசக்தித் திட்டத்தை உருவாக்குவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. வளைகுடா பகுதியில் நிலவிவரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், அணு ஆயுதப் பரவல் குறித்த அச்சங்களை எழுப்பியுள்ளது.
அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் மற்றும் சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அசாிஸ் பின் சல்மான் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டு ஒப்பந்தம் பல தசாப்த கால பொருளாதார மற்றும் மூலோபாய இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சவுதி அரேபியா எதிர்காலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கத்திற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்துவிடுமோ என்ற கவலைகள் நிபுணர்கள் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தொடர்கின்றன. ஆயினும், இந்த ஒப்பந்தம் கடுமையான பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்றும் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது.








