வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ராணுவ உயர்மட்ட ஜெனரலை திடீரென டிஸ்மிஸ் செய்துள்ள நிலையில், போருக்கு ரெடியாகவும் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். ஏவுகணை சோதனை என்ற பெயரில் வடகொரியா திடீர் திடீரென ஏவுகணைகளைத் தொடர்ச்சியாக டெஸ்ட் செய்யும்.
இதற்குப் பதிலடி கொடுப்பதே தென்கொரியாவின் வேலையாக இருக்கும். இதனால் சர்வதேச அளவில் மிகவும் பதற்றமான எல்லைகளில் ஒன்றாகவே தென்கொரியா- வடகொரியா எல்லை இருந்து வருகிறது.
தென்கொரியாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. அதேநேரம் வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. கிம் ஜாங் உன் நினைத்தது என்ன வேண்டுமானாலும் அங்கு நடக்கும் என்பதால் அங்கு எப்போதும் ஒரு வித பதற்றமான சூழலே இருக்கும். இதற்கிடையே அவர் ராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலை திடீரென டிஸ்மிஸ் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், போருக்குத் தயாராகும்படியும் உத்தரவிட்டுள்ளார். ஆயுத உற்பத்தியை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ள அவர், ராணுவ பயிற்சிகளையும் அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். கிம் ஜாங் திடீரென மீட்டிங் ஒன்றை நடத்தி அதில், வட கொரியாவின் எதிரிகளைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர் எதிரி நாடுகள் என எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லையாம்.