பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமான ‛பாஸ்டில் டே' இன்று கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள நிலையில் இந்தியாவின் முப்படை வீரர்கள் பிரான்ஸ் நாட்டின் படை வீரர்களுடன் இணைந்து அணிவகுப்பு செய்து அசத்த உள்ளனர். இந்த விழாவில் இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவுரவிக்கப்பட்ட நிலையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ‛பாஸ்டில் டே' என்ற பெயரில் ஆண்டுதோறும் ஜூலை 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் உலக தலைவர்களை அந்நாடு சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம். அந்த வகையில் தான் இந்த ஆண்டுக்கான தேசிய தினத்துக்கான கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் சென்றார். விமானத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியில் உற்சாகமாக பேசினார். யூபிஐ பணப்பரிவர்த்னை பற்றி பிரதமர் மோடி பெருமையாக கூறினார். மேலும், ‛‛பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும். இது இந்தியாவுக்கான பெருமை. உலகின் பழமையான மொழி தமிழ் தான். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதை விட நமக்கு பெரிய பெருமை வேறு என்ன இருக்க முடியும்'' என மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.