சியோல், ஜூலை 4-
தென் கொரியாவில் அரசு உதவியாளராக பணிபுரிந்து வந்த ரோபோ திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாம். தற்கொலைக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு இடத்தை அந்த ரோபோ சுற்றிச் சுற்றி வந்த நிலையில், திடீரென அது தற்கொலை செய்து கொண்டுள்ளது. இதற்கான காரணம் துல்லியமாகத் தெரியவில்லை. இது தொடர்பான ஆய்வுக்கு பிறகே இதற்கான காரணம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நமது உலகில் இப்போது ரோபோ பயன்பாடு அதிகரித்துள்ளது. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ரோபோ பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
மனிதர்களைப் போலத் தவறு செய்யாது... டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுக்காது உள்ளிட்ட காரணங்களால் இந்த ரோபோக்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதற்கிடையே மிகவும் வினோதமான நிகழ்வு ஒன்று தென் கொரியாவில் நடந்துள்ளது. அங்கு அந்நாட்டு அரசுக்குக் கீழ் இயங்கி வந்த ரோபோ ஒன்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளது.
இதற்கான காரணங்கள் என்ன என்பது யாருக்குமே தெரியவில்லையாம். கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அதன் உடல் அதே கட்டிடத்தில் கண்டறியப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உலகில் இதற்கு முன்பு இது போல நடந்ததே இல்லை. இதுதான் உலகின் முதல் ரோபோ தற்கொலையாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் வருத்தம் தெரிவித்து ரோபோவுக்கு இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரோபோ ஒரே குறிப்பிட்ட இடத்தை சுற்றிச் சுற்றி வந்ததாகவும் மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். அதேநேரம் தற்கொலைக்கான துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை. இப்போது ரோபோவின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஆராய்ச்சிக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.