இந்தியா, பிப்ரவரி 26 -
விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கிரேட்டஸ் ஒப் ஓல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தளபதி ஒவ்வொருமுறையும் புது புது இயக்குனர்களுடன் இணையும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாக இருக்கும். அந்த வகையில் விஜய் முதல் முறையாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது.
அஜித்திற்கு மங்காத்தா என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கும் ஒரு தரமான வெற்றிப்படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமான காதலுக்கு மரியாதை திரைப்படம் தற்போது திரையரங்கில் ரீரிலீஸாகியுள்ளது.
பாசிலின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் விஜய், ஷாலினி ஆகியோர் நடித்த இப்படம் 1997 ஆம் ஆண்டு திரையில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இன்றுவரை ரசிகர்கள் இப்படத்தையும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் கொண்டாடி வருகின்றனர். என்னதான் ரசிகர்கள் இப்படத்தை டிவியில் பலமுறை பார்த்திருந்தாலும் மீண்டும் திரையில் காண ஆவலாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் அனைவருக்கும் பிடித்தமான காதலுக்கு மரியாதை திரைப்படத்தை பற்றி விஜய் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. காதலுக்கு மரியாதை திரைப்படம் வெளியான சமயத்தில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் விஜய் பேசியதாவது, காதலுக்கு மரியாதை திரைப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான திரைப்படமாகும்.
அந்த படத்தில் எப்படி என் பெற்றோராக நடித்த சிவகுமார் மற்றும் ஸ்ரீவித்யாவின் கதாபாத்திரம் இருந்ததோ அதை போல தான் நிஜத்திலும் என் அம்மா அப்பா இருப்பார்கள். சிவகுமார் எப்படி என்னிடம் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் அப்பாவாக மட்டுமல்லாமல் ஒரு நண்பராகவும் இருந்தாரோ அதைப்போல தான் என் அப்பாவும் என்னிடம் நடந்துகொள்வார்.
மேலும் ஸ்ரீவித்யா அப்படத்தில் என்னிடம் செல்லமாக கோபித்துக்கொள்வதை போல தான் நிஜத்திலும் என் அம்மா என்னிடம் செல்லமாக கோபித்துக்கொள்வார். எனவே தான் காதலுக்கு மரியாதை திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படமாக இருந்து வருகின்றது என்றார் விஜய்.