மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது.
நேற்று சென்னையில் தொய்வின்றி பெய்த மழையால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்கள் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அவர் அந்த வீடியோவில், 'எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் புயல் வந்தால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும், பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வரும்.
அண்ணா நகரில் உள்ள என் வீட்டில் கூட ஒரு அடிவரை தண்ணீர் தேங்கியுள்ளது.
இங்கு இந்த நிலைமை என்றால் தாழ்வான பகுதிகளில் இதை விட மோசமானதாக இருக்கும்.