சு. மித்ரன்
இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ். ஜே. சூர்யா, தெலுங்கு நடிகர் சுனில், ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி உட்பட இன்னும் பல திரை நட்சத்திரங்கள் நடித்து செப்டம்பர் 15 ஆம் நாள் மலேசியத் திரையரங்குகளில் வெளியிடு கண்டுள்ளது மார் ஆண்டணி திரைப்படம்.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சி (டிரெய்லர்) இரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் வரவேற்பையும் பெற்றிருந்த நிலையில், முழு திரைப்படமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்திடும் என்று சொல்லலாம்..
கால இயந்திரம் (டைம் மெஷின்), கேங்ஸ்டர் என இருவேறு அம்சங்களையும் கதையின் மையப்புள்ளியில் வைத்து புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஆதிக். மேலும், இத்திரைப்படக் கதை நடக்கும் காலக் கட்டமாக 1970 ஆம் ஆண்டுகளையும் 1995ஆம் ஆண்டையும் தேர்தெடுத்து சில உண்மை சம்பவங்களை வசனங்களின் வழி ஆங்காங்கே தூவி இருப்பது கதைக்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறது. சில இடங்களில் இயக்குநர் மிகவும் குறும்புக்காரர் என்பதையும் சில வசனங்கள் வழி பதிவு செய்து விடுகிறார். (படத்தைப் பார்த்தால் புரியும்)
1975இல் கேங்ஸ்டராக இருக்கும் தமது தந்தை விஷாலின் மீது 1995ஆம் ஆண்டில் இளைஞனாக இருக்கும் மகன் விஷால் வெறுப்பு கொண்டிருக்கிறார். அதே சமயம், தமது தந்தையின் ஆருயிர் நண்பனான முதியவர் எஸ். ஜே. சூர்யா மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறார். வயதான எஸ். ஜே. சூர்யாவும் அவ்வாறே அன்பை விஷால் மீது வெளிக்காட்டும் வேளையில், தமது சொந்த மகனான இள வயது எஸ். ஜே. சூர்யா மீது அவ்வளவு நாட்டம் கொள்ளாமல் இருக்கிறார்.
கார் மெக்கானிக்காக சொந்த பட்டறையை வைத்து நடத்தி வரும் பயந்த சுபாவம் கொண்ட இளவயது விஷாலுக்கு 1970களில் கண்டுபிடிக்கப்பட்டக் காலத்தைக் கடந்து இறந்த காலத்தில் இருக்கிறவர்களிடம் பேசக் கூடிய தொலைபேசி கையில் கிடைக்கிறது..
அதனைக் கொண்டு தமது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை செய்ய முயற்சிக்கிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் மையக் கதை.
சைன்ஸ் - ஃபிக்ஷன் கதையில் பல பொழுதுபோக்கு அம்சங்களைக் கோர்த்து விஷால், எஸ். ஜே. சூர்யா ஆகிய இருவருமே அப்பா - பையன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரனின் முந்தையப் படங்களான திரிஷா இல்லைனா நயந்தாரா, ஏ ஏ ஏ, பகீரா ஆகியவற்றை ஒப்பிடும்போது, இந்தத் திரைப்படம் பல மடங்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைகிறது.
இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரக்காஷ் தன்னுடைய பங்கினை சிறப்பாக செய்திருக்கிறார். ஜிவியின் இசையா இது என வியந்து கேட்க வைக்கும் வகையில் பின்னணி இசையிலும் பாடல்களிலும் மிரட்டி இருக்கிறார்.
இந்தப் படத்தில் 5 வெவ்வேறு ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரிந்துள்ளனர். எனவே, சண்டைக் காட்சிகள் கனமானதாகவும் பிம்மாண்டமாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை, ஆனல், சண்டைக் காட்சிகளின் பின்னணியில் 80 ஆம் ஆண்டு பாடல் ஒலிப்பது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பானியை நினைவுபடுத்துகிறது. இனி இந்த பானிதான் வரும் திரைப்படங்களின் டிரெண்ட் என ஆகுமோ ?
படத்தின் டிரெய்லரில் வருவது போல் எஸ். ஜே. சூர்யாவின் காதாப்பாத்திரம் பலரைக் கவர்கிறது. முன்னதாக, அவர் நடித்த மாநாடு திரைப்படத்தில் வில்லனாகத் தோன்றினாலும், வில்லத்தனத்துடன் நகைச்சுவையையும் கலந்து கொடுத்து படத்தைத் தூக்கி நிறுத்தி இருப்பார். அதே போல் வெவ்வேறு காட்சிகளில் வெவ்வேறு முக பாவணைகள், வசனங்கள் பேசுவதிலும் பல்வேறான உணர்ச்சிகள் என அனைத்தையும் மார்க் ஆண்டணி படத்தில் பண்டல் கட்டிக் கொடுத்துள்ளார். டிரெய்லரில் வரும் அவரது பல வசனங்கள் இன்னும் சில வாரங்களுக்கு சமூக ஊடகங்களிலும் சமூகத்தின் பேச்சு வழக்கிலும் நிச்சயம் நிறைந்திருக்கும்..
படத்தின் முதல் பாதியில் விஷாலைச் சுற்றி கதை விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் எஸ். ஜே. சூர்யா ஆளுமை செலுத்துகிறார். இதற்கிடையில் 70 ஆ ஆண்டு 90ஆம் ஆண்டு என மாறி மாறி காட்சிகளைச் சிக்கில்லாத ஜடையாய் பின்னி வைத்து அதில் சில்க் சுமிதா எனும் பூவையும் சூடி இருக்கிறார் இயக்குநர் ஆதிக்.
சில ஃபிளாஷ் பேக் காட்சிக்கு பில்ட் அப் சேர்ப்பதற்காகவே நடிகர் நிழல்கள் இரவியை இப்படத்தில் (வலிந்து) திணித்திருக்கிறார்களோ எனவும் யோசிக்க வைக்கிறது. எல்லாம் கே.ஜி.எஃப். செய்த மாயமாக இருக்கலாம்.
இத்திரைப்படக் கதைக்கும் சில்க் சுமிதாவுக்கும் என்ன சம்பந்தம் ? காலத்தைக் கடந்த இறந்த காலத்தில் தற்கால கதாபத்திரங்கள் என்ன செய்கிறார்கள் ? கால இயந்திரத்தால் ஹீரோ - வில்லன் வாழ்க்கை தலைகீழாக மாறியதா ? இப்படத்தில் வில்லான் யாராக இருக்கக் கூடும் ? யார் இந்த மார்க் ஆண்டணி போன்ற பல்வேறு முக்கியமான கேள்விகளுக்குப் பதில் காண, இன்று செமப். 15 ஆம் நாள் வெளியீடு கண்டிருக்கும் மார்க் ஆண்டணி திரைப்படத்தைப் பாருங்கள். 100% பொழுதுபோக்கிற்கும் மனமகிழ்வுக்கும் உத்திரவாதம் கொடுக்கிறது மார்க் ஆண்டணி திரைப்படம்.