இந்தியா, ஜூன் 22-
நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் - பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ந் தேதி 1974-ம் ஆண்டு பிறந்த ஜோசப் விஜய் தான் இன்று ரசிகர்கள் தளபதியாக கொண்டாடி வரும் விஜய். அப்பாவின் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய விஜய், சினிமா தான் எதிர்காலம் என்று அப்போதே முடிவு செய்துவிட்டார். நடிக்கும் ஆர்வத்தால் கல்லூரி படிப்பையும் பாதியிலேயே கைவிட்டார் விஜய்.

தாயார் ஷோபா திரைக்கதை எழுத, தந்தை சந்திரசேகரின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். அந்த தலைப்புக்கு ஏற்ப இப்போதைய உயரத்தை விஜய் எட்டுவார் என்று, யாரும் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். விஜய்யின் ஆரம்ப கால சினிமா வளர்ச்சிக்கு அவரின் தந்தை எஸ்.ஏ.சி தான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
முதல் படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திராத விஜய்க்கு, பட்டிதொட்டியெங்கும் அறிமுகம் கிடைத்திட வேண்டும் என அவர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு தான் விஜய்காந்த் உடன் விஜய்யை இணைத்து அவர் இயக்கிய செந்தூரப்பாண்டி திரைப்படம். அப்படத்தின் மூலம் எஸ்.ஏ.சி எதிர்பார்த்தது நடந்தேறி விஜய் கிராமங்களுக்குள்ளும் ஊடுருவினார்.
4 பைட்டு, 5 பாட்டு என்று ஒரு பார்முலா வளையத்துக்குள் சாதாரண ஹீரோவாக வலம் வந்த விஜய்யை 1996-ம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தின் மூலம், வெளியே கொண்டு வந்தார் இயக்குனர் விக்ரமன். 1998-ல் சங்கிலி முருகன் தயாரிப்பில் பாசில் இயக்கத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் தமிழ் மக்கள் விஜய்யை தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக கொண்டாட தொடங்கினர்.

இப்படி சினிமாவில் மளமளவென வளர்ந்து வந்தபோதே கடந்த 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந் தேதி குடும்பத்தினர் சம்மதத்தோடு தன்னுடைய காதலி சங்கீதாவை கரம்பிடித்தார் விஜய். திருமணத்துக்கு பின்னர் விஜய்யின் சொந்த காஸ்டியூம் டிசைனராகவும் மாறிவிட்டார் சங்கீதா. மனைவி வந்த பின்னர் குஷி, ப்ரண்ட்ஸ், யூத், பிரியமானவளே என வரிசையாக ஹிட் படங்களை கொடுக்க தொடங்கினார் விஜய்.
அதிலும் 2005-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் விஜய்யை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. அப்படத்தை தமிழ்நாடே கொண்டாடி தீர்த்தது. சொல்லப்போனால் சிறு குழந்தைகள் கூட விஜய்யின் ரசிகர்களாக மாற ஆரம்பித்தது அப்படத்தின் மூலம் தான். கில்லி பட விஜய்யின் திரை சரித்திரத்தையே மாற்றியதோடு, அவருக்கு நிரந்தர இடத்தையும் பெற்றுத் தந்தது.

ரஜினிக்கு பின் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் ஹீரோ விஜய் தான், திறமையாக டான்ஸ் ஆடும் தென்னிந்திய ஹீரோக்களில் விஜய் முதன்மையானவர் என மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள். நடனம் நடிகருக்கு முக்கியம் என்றாலும் சக நடிகர்கள் பலரும் முயற்சிக்காத காலகட்டத்திலேயே சொந்தக் குரலில் பாடத்தொடங்கினார் விஜய். தற்போது வரை லியோவில் நான் ரெடி தான் வரவா, கோட் படத்தில் விசில் போடு என அந்த காந்தக் குரல் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.
நடிகர் விஜய் காதலுக்கு மரியாதை மற்றும் திருப்பாச்சி ஆகிய திரைப்படங்களுக்காக தமிழ்நாடு அரசின் விருதினை இரண்டு முறை பெற்றிருக்கிறார் விஜய். இப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக வலம் வரும் விஜய் இன்று ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் பணக்கார நடிகராக வலம் வரும் விஜய், சமீபத்தில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலின் படி ரூ.474 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார். ரஜினி, கமல், அஜித் போன்ற நடிகர்களுக்கு விஜய்யை விட கம்மியான சொத்துக்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.