அஹ்லோங்எனப்படும் சட்டவிரோத வட்டி முதலைகளின் நடவடிக்கையை துடைத்தொழிப்பதில் உள்துறை அமைச்சு தொடர்ந்து போராடி வருவதாக அதன் துணை அமைச்சர் டத்தோ செரி டாக்டர் ஷம்சுல் அனுவார் நாசாரா தெரிவித்தார்.
சட்டவிரோத வட்டி முதலைகளின் நடவடிக்கையை முழு வீச்சில் வேரறுப்பதற்கு உள்துறை அமைச்சு தொடர்ந்து போராடி வருகிறது என்ற போதிலும் அந்த வட்டி முதலைகளின் தேவையை மக்கள் தொடர்ந்து நாடி வருகின்ற காரணத்தினால் தற்போது அது பெரியளவில் விரிவாக்கம் கண்டுள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார்.
லைசென்ஸ் பெற்ற நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் வட்டி முதலைகளிடம் கடன் மிக சுலபமாக, விரைவாக கிடைப்பதால் வட்டி முதலைகளை நாடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் வட்டி முதலைகளுக்கு எதிராக உள்துறை அமைச்சு தொடர்ந்து கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்பதற்கு அவர்களில் பலர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பது சான்றாகும் என்று ஷம்சுல் அனுவார் சுட்டிக்காட்னார்.