கோலாலம்பூர், செப்டம்பர்.25 -
மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ, தனது விசுவாசமான வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் “அப்-க்ளோஸ் அண்ட் பெர்சனல் வித் ஸ்ரீனிவாஸ்” எனும் இசை நிகழ்ச்சியை நடத்தியது.
செப்டம்பர் 21 அன்று பெட்டாலிங் ஜெயாவின் ருவாங் ராமாவில் நடைபெற்ற இந்த சிறப்பு இசை இரவு, ஆஸ்ட்ரோ ரிவார்ட்ஸ் மூலம் வெகுமதி பெற்ற வாடிக்கையாளர்கள், ஊடக நண்பர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட இரசிகர்களைக் கவர்ந்தது.
இந்திய பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ், தனது வெற்றிப் பாடலான ஆப்பிள் பெண்ணே நீயாரோ பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கிய போது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மின்சாரப் பூவே, முழுமதி, சொட்ட சொட்ட போன்ற ஹிட் பாடல்கள் இரசிகர்களைக் கவர்ந்ததோடு, மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலியாக கம்பன் ஏமாந்தான், மன்றம் வந்து, தொட தொட ஆகிய பாடல்களையும் பாடி ரசிகர்களை நெகிழச் செய்தார். மேலும் மலேசிய தமிழ்ப் பாடலான கனா கனாவை, உள்ளூர் கலைஞர்கள் குமரேஷ் மற்றும் ஸ்ரீ வித்யாவுடன் இணைந்து பாடிய போது ரசிகர்கள் மெய்மறந்தனர்.
உள்ளூர் கலைஞர்களான அருளினி, ஹெமித்ரா, குமரேஷ் மற்றும் ஸ்ரீ வித்யா ஆகியோரும் மேடையை அலங்கரித்து, என் உயிரே, நெஞ்சம் ஒரு முறை நீ என்றது, பூவுக்கெல்லாம் சிறகு போன்ற ஸ்ரீனிவாஸின் பாடல்களைப் பாடினர். ராகா அகிலா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, கேள்வி–பதில் அமர்வின் மூலம் ரசிகர்கள் ஸ்ரீனிவாஸுடன் நேரடியாக உரையாடும் அரிய வாய்ப்பையும் வழங்கியது.
இந்த இசை நிகழ்ச்சிக்கு ஈசா திரேடிங், தேஸ்த்தி புட் கேட்டரஸ், பேன்ஸி கஸ்த்தம் கேக்ஸ், சோயா பென்ஸ், வின்பிக்ஸ் போட்டோ பூத், டி'எவர்லாஸ்டிங் நாட், பெசிக் ஸ்ட்ரீம்ஸ், பிரிண்ட் அல்கமி மற்றும் அன்னலட்சுமி சைவ உணவகம் கோலாலம்பூர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நிதியுதவி வழங்கின.
அதிகாரப்பூர்வ மின்னியல் கூட்டாளராக ஆஸ்ட்ரோ உலகமும், வானொலி கூட்டாளராக ராகாவும் இணைந்திருந்தன. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இந்த இசை நிகழ்ச்சி விரைவில் ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பாகவுள்ளது.