கோலாலம்பூர், டிசம்பர்.08-
ஆஸ்ட்ரோவின் பிரபல நகைச்சுவை–நாடகத் தொடரான பசங்க சீசன் 3-ஆனது இன்று டிசம்பர் 8 ஆம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
பசங்க சீசன் 1 மற்றும் 2 -டிற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பினையடுத்து, பசங்க சீசன் 3- ஆனது, மொத்தம் 228 அத்தியாயங்களோடு தயாரிக்கப்பட்டுள்ளதால், இது மலேசியாவின் முதல் தமிழ் நெடுந்தொடர் என்ற பெருமையைப் பெறுகிறது.
பசங்க சீசன் 2-இன் வெற்றியானது, ரசிகர்களிடையே உள்ள வலுவான தொடர்பை நிரூபித்தது.
அதனை அடிப்படையாகக் கொண்டு சீசன் 3 உருவாக்கப்பட்டு, மலேசிய பொழுதுபோக்கு உலகில் இன்னொரு சாதனையைப் படைத்திருப்பதாக ஆஸ்ட்ரோ இந்திய வாடிக்கையாளர்கள் பிரிவுத் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் தெரிவித்தார்.
இந்த புதிய சீசனானது ஆச்சரியங்கள் நிறைந்த உணர்வுப்பூர்வமான கதைக் களத்தோடு, நகைச்சுவையாலும் ரசிகர்களை ஈர்க்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விருது பெற்ற இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கியுள்ள இந்த தொடரை டேனேஸ் குமார் மற்றும் டி.எஸ். டாக்டர் விமலா பெருமாள் தயாரித்துள்ளனர்.
டேனேஸ் குமார், மூன் நிலா, தாஷா கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களும் இதில் நடித்துள்ளனர்.
இன்று டிசம்பர் 8-ஆம் தேதி முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன், ஆஸ்ட்ரோ கோ மற்றும் சூகாவில் புதிய அத்தியாயங்கள் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.








