சென்னை போயஸ் கார்டனில் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைய காலமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி விட்டன.
அந்த வகையில், சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளார். டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் ரஜினியின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனைக்குப் பிறகு, அது புரளி என தெரிய வந்தது. இருப்பினும், மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.