Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இந்திய சினிமாவில் அதிக செலவில் உருவாகும் முதல் படம் ராமாயணா
சினிமா

இந்திய சினிமாவில் அதிக செலவில் உருவாகும் முதல் படம் ராமாயணா

Share:

சரித்திர கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிரபாஸ் கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆதிபுருஷ் எனும் படத்தில் ராமராக நடித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது ரன்பிர் கபூர் ராமராக நடித்து வரும் ராமாயணா திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இப்படத்தை இயக்குநர் நிதேஷ் டிவாரி இயக்கி வருகிறார்.

ராமர் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் நடிக்க, சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் ராவணனாக கேஜிஎப் யாஷ் நடிக்கிறார். உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் ஆகிய இருவரும் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

அண்மையில் இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இது இப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

இப்படத்தை நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ரூ. 800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், தற்போது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில், உண்மையான பட்ஜெட் விவரம் இதுதான் எனக் கூறி அண்மைய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ராமாயணா திரைப்படம் ரூ. 1600 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்திய சினிமாவில் மிகவும் உயரிய செலவில் உருவாகும் திரைப்படம் இதுவே ஆகும். இப்படத்தின் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Related News