இந்தியா, ஜூன் 24-
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி படம் தயாராகி வரும் நிலையில், அடுத்த படத்துக்காக அவர் இயக்குனர் அட்லீ உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினி உடன் ராணா டகுபதி, பகத் பாசில், அமிதாப் பச்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்து வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் ஷூட்டிங் நடைபெற உள்ளது. ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பிரபலங்களும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர ரஜினி கைவசம் மேலும் ஒரு படம் உள்ளது. அது தான் ஜெயிலர் 2. நெல்சன் இயக்க உள்ள இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும் வேலைகளை மேற்கொண்டு வருகிறார். இது ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, தற்போது ரஜினியை வைத்து பான் இந்தியா படம் ஒன்றை எடுக்கும் வேலைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளது.
இப்படத்தை அட்லீ இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். கடைசியாக அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் படத்தை போல் இப்படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். இதில் ரஜினி நடிக்க சம்மதித்தால், அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.