Oct 20, 2025
Thisaigal NewsYouTube
2024-ல் இந்தியாவின் அதிக லாபம் ஈட்டிய படம்
சினிமா

2024-ல் இந்தியாவின் அதிக லாபம் ஈட்டிய படம்

Share:

இந்தியா, ஏப்ரல் 16-

நாடு முழுவதும் வசூல் சாதனைகளை முறியடித்து 1000% மடங்கு லாபம் ஈட்டிய படம் எது தெரியுமா?

2024-ம் ஆண்டு தொடங்கி நான்கரை மாதங்களே ஆகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல படங்கள் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மலையாள திரையுலகிற்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.

ஆம், பிரேமலு, பிரம்மயுகம், ஆடு ஜீவிதம் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களால் மலையாள திரையுலகம் முன்னணியில் உள்ளது. ஆனால் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, நாடு முழுவதும் வசூல் சாதனைகளை முறியடித்த ஒரு படம் உள்ளது. ஆம். அது ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படம் தான்.

சிதம்பரம் எழுதி இயக்கி, பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், கேரளாவின் மஞ்சுமெல் என்ற பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் போது குணா குகையில் ஒருவர் மட்டும் சிக்கிக் கொள்கிறார். அவரை எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தான் மஞ்சுமெல் பாய்ஸ் படம் உருவானது.

குறிப்பாக குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடலை பயன்படுத்தியது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து, இதுவரை ரூ.225 கோடி வசூலித்து, மலையாளத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஆனால் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் எந்த ஒரு இந்திய படமும் இதுவரை செய்யாத அளவு லாபம் ஈட்டி உள்ளது. ஆம். இந்த படம் 1000% லாபம் ஈட்டியுள்ளது.

இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கண்ட மற்ற குறைந்த பட்ஜெட் படங்களும் உள்ளன. தெலுங்கு சூப்பர் ஹீரோ படமான ஹனுமான். ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் ரூ.330 கோடியை வசூலித்தது. இப்படம் 725% லாபம் ஈட்டியது.

அதேபோல், அஜய் தேவ்கன் மற்றும் ஆர் மாதவன் நடித்த ஷைத்தான் படம் ரூ 60 கோடி பட்ஜெட்டில் உருவானது, இப்படம் ரூ 209 கோடி வசூல் செய்தது. இதன் மூலம் இந்த படம் 250% லாபம் ஈட்டி உள்ளது. ஆனால் அதே நேரம் ஃபைட்டர் மற்றும் குண்டூர் கரம் போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும், அவை லாபகரமான படமா என்றால் இல்லை. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படங்கள் 100%க்கும் குறைவான லாபத்தைப் பெற்றுள்ளன.

இதனிடையே மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தயாரிக்க சிராஜ் வலியதரா என்பவர் ரூ.7 கோடி கொடுத்ததாகவும், அவருக்கு படத்தின் லாபத்தில் இருந்து 40% கொடுப்பதாக தயாரிப்பாளர்களான பரவா பிலிம்ஸ் மற்றும் பங்குதாரர் ஷான் ஆண்டனி ஆகியோர் வாக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்த நிலையில், சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறி சிராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்களின் வங்கி கணக்கை முடக்கும் படி உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News