இந்தியா, ஜூலை 01-
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கல்கி 2898AD படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.
பான் இந்தியா ஹீரோவான பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கல்கி 2898AD. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, திஷா பதானி, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
கல்கி 2898AD திரைப்படம் வரலாற்று புனைவுடன் கூடிய பேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் புஜ்ஜி என்கிற காரும் முக்கிய பங்காற்றி உள்ளது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனம் இப்படத்திற்காக அதிநவீன கார் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்துள்ளது. அந்த காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தான் குரல் கொடுத்து உள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் கல்கி 2898AD திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜூன் 27ந் தேதி திரைக்கு வந்தது.

ரிலீஸ் ஆன முதல் நாளே பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.191 கோடி வசூலை வாரிக்குவித்தது. பாகுபலி 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு அடுத்தபடியாக முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய இந்திய திரைப்படம் என்கிற மாஸான சாதனையை கல்கி 2898AD திரைப்படம் படைத்தது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் கல்கி 2898AD திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி கல்கி 2898AD திரைப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. இப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதனை இன்னும் ஒரு சில தினங்களில் கல்கி 2898AD திரைப்படம் எடுத்துவிடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த படங்களில் பாகுபலி 2 மட்டும் ரூ.1000 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்திய நிலையில், கல்கி 2898AD திரைப்படமும் அதனை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.