அண்மைய காலமாக திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. செய்தி அறிந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனை செய்கின்றனர்.
அதன் பின், அது வெறும் புரளி தான் எனத் தெரிய வருகிறது. அண்மையில் கூட நடிகை திரிஷாவின் வீட்டிற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அஜித்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் எஸ்.வி. சேகர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீட்டிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதனை அடுத்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.








