Jan 16, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்ட்ரோவில் ‘ஹவுஸ் கணவன்’ தொடர்
சினிமா

ஆஸ்ட்ரோவில் ‘ஹவுஸ் கணவன்’ தொடர்

Share:

கோலாலம்பூர், மே.28

ஆஸ்ட்ரோ நிறுவனம் சமூக நலன் சார்ந்த தலைப்புகளில் ஒன்றான ஆரோக்கியமானத் திருமண வாழ்க்கையின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் ஹவுஸ் கணவன் என்ற தொலைக்காட்சித் தொடரை ஒளிபரப்புகிறது.

வேலை செய்துச் சுயக் காலில் நிற்க வேண்டும் உள்ளிட்டப் பல லட்சியங்களைக் கொண்டிருந்தாலும் அமுதா எனும் பெண் மிகப் பழமைக் கூறுகளைப் பின்பற்றும் தனது மாமியார் அரசியின் கடுமையான எதிர்பார்ப்புகளால் சவால்களை எதிர்கொள்கிறார். அமுதாவின் கணவர் சிவா, கணவனாகவும் மகனாகவும் தனதுப் பாத்திரங்களின் பொறுப்புகளைச் சமமாக வகிக்கப் போராடுகிறார். அமுதாவுக்குப் பக்கபலமாக இ விரும்பினாலும், சில நேரங்களில் தனதுத் தாயை எதிர்த்துச் செயல்படத் தயங்குகிறார். கணவன்-மனைவியான அஞ்சலி மற்றும் விஷ்ணு, புதிய அண்டை வீட்டுக்காரர்களாக குடியேறும் போது, ​​அமுதா மற்றும் சிவாவின் வாழ்க்கையில் எதிர்பாராதத் திருப்பங்கள் ஏற்படுகின்றன.

தனதுச் சுய விருப்பத்தினால் இல்லத்தரசனாக இருக்கும் விஷ்ணு, அஞ்சலியின் நோய்வாய்ப்பட்டத் தாயாரை மென்மையாகப் பராமரிப்பதன் மூலமும், மனைவியின் தொழிலுக்கு அவர் அளிக்கும் அசைக்க முடியாத ஆதரவின் மூலமும் அமுதாவின் பாராட்டைப் பெறுவதோடு அமுதாவின் சிந்தனையையும் தூண்டுகிறார். விஷ்ணுவைப் போலவே, வீட்டில் அதிகப் பொறுப்புகளை ஏற்கச் சிவாவை ஊக்குவிப்பதன் மூலம் அவரிடம் மாற்றங்களைக் கொண்டுவர அமுதா எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கிடையில் மாறுபட்ட எதிர்பார்ப்புகளுக்கும் குடும்பத்திற்குள் ஆழமானப் பதற்றங்களுக்கும் வழி வகுக்கிறது. ஒரு தொழிலில் சேர்ந்து நிதி ரீதியாகச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்ற, அமுதா சமூக மற்றும் குடும்ப விதிமுறைகளை மீறுவாரா? குழப்பங்கள், மோதல்கள் மற்றும் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், சிவாவை வீட்டில் மிகவும் பொறுப்பான நபராகவும் தனக்கு ஆதரவு வழங்குபவராகவும் மாற்றுவதில் அமுதா வெற்றி பெறுவாரா?

28 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரை விருது வென்றத் திரைப்படத் தயாரிப்பாளர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கித் தயாரித்திருக்கிறார். இதில் சி. குமரேசன், கிருத்திகா கயல், சசிகுமார், நித்யா ஸ்ரீ, கோகிலா, பவிதிராஜ்ஸ், குபேன், கபில் உள்ளிட்டப் பல புகழ் பெற்ற உள்ளூர்க் கலைஞர்கள் நடித்துள்ளனர்.

ஹவுஸ் கணவன் தொடரை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் காணலாம்.

Related News

ஆஸ்ட்ரோவில் ‘ஹவுஸ் கணவன்’ தொடர் | Thisaigal News